இந்தியாவின் டாப் 10 இன்டீரியர் டிசைனர்ஸ்..!
இந்தியர்களின் ரசிப்பு திறன் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தங்களைச் சுற்றி ஒவ்வொன்றும் கலைநயத்துடன் இருக்க வேண்டும் என்பதில் அதிக ஆர்வம் செலுத்துகின்றனர். குறிப்பாக தங்கள் வீட்டின் உள் வடிவமைப்பு எனப்படும் இண்டிரீயர் டிசைன் சிறப்பாக இருக்க வேண்டும் என்று சொந்தமாக வீடு கட்டுவோர் கருதுகின்றனர். இங்கு தான் இண்டீரியர் டிசைனர்களின் பங்கு தேவைப்படுகிறது. இண்டீரியர் டிசைனிங் துறையும் தொடர்ந்து ஏறுமுகம் கண்டுள்ளது. இந்தியாவில் இந்தத் துறையில் சிறந்து விளங்குபவர்களுக்கு சர்வதேச அளவில் வரவேற்பு இருப்பதும் குறிப்பிடத்தக்கது. அப்படி நமது நாட்டில் புகழ்பெற்றுள்ள சிறந்த இண்டிரீயர் டிசைனர்கள் பலர் உள்ளனர், அதில் குறிப்பிட்ட 10 நபர்களை பற்றி இங்கு பார்ப்போம்.
10. பிரேம் நாத் & அசோசியேட்ஸ்
மும்பையை தலைமையிடமாக கொண்ட பிரேம் நாத் & அசோசியேட்ஸ் இந்தியாவின் முன்னணி இண்டீரியர் டிசைன் நிறுவனங்களில் ஒன்றாக திகழ்கிறது. இந்நிறுவனம் வீடுகள், உணவு விடுதிகள், கோயில்கள் மற்றும் வில்லாக்கள் ஆகியவற்றிற்கான கட்டடக்கலை சேவைகளை வழங்குகிறது. கூடுதலாக, நிறுவனம், திட்ட மேலாண்மை மற்றும் ஆலோசனை தொடர்பான சேவைகளை வழங்குவதிலும் புகழ் பெற்று விளங்குகிறது.
இந்தியாவின் முதல் சுழலும் உணவகத்தை வடிவமைத்தவர்கள் இவர்களே பெங்களூருவில் உள்ள கோல்டன் பாம் ரிசார்ட் மற்றும் மும்பையின் பக்தி பார்க் குடியிருக்கு ஆகியவையும் இவர்களின் கை வண்ணத்தில் உருவானவை.
9. ஷப்னம் குப்தா
2015ம் ஆண்டு சிறந்த இண்டீரியர் டிசைனர்களில் ஒருவராக தேர்ந்தெடுக்கப் பட்டவர் ஷப்னம் குப்தா. “தி ஆரஞ்சு லேன்” என்ற வடிவமைப்பு நிறுவனத்தை நடத்தி வருகிறார். இவர் குடியிருப்பு மற்றும் வணிக கட்டிடங்கள் என இரண்டு விதமான வடிவமைப்பிலும் சிறந்து விளங்குபவர். இட மேலாண்மை தொடர்பான நுட்பங்களை அறிந்திருப்பது இவரது சிறப்பு.
இர்ஃபான் கான், ராணி முகர்ஜி, ஆதித்யா சோப்ரா உள்ளிட்ட பல பாலிவுட் பிரபலங்கள் இவரது வாடிக்கையாளர்கள்.
8. ராஜீவ் சைனி & அசோசியேட்ஸ்
பெங்களூருவை தலைமையிடமாக கொண்டு இயங்கும் ராஜீவ் சைனி & அசோசியேட்ஸ் இண்டீரியர் டிசைனிங்கல் முத்திரை பதித்த தலைசிறந்த நிறுவனமாகும். கட்டிடக் கலையிலும் நிபுணத்துவம் பெற்றிருப்பவர்கள் இவர்கள். இந்தியாவில் முதல் இண்டிரியர் டெகரேட்டர்ஸ் என்ற பெருமையும் இவர்களுக்குண்டு. தற்போது ஆன்லைன் மூலமாகவும் வடிவமைப்பு சேவையை வழங்கி வருகின்றனர்.
மும்பை, லண்டன் உள்ளிட்ட பல நகரங்களில் ஆடம்பர வீடுகளுக்கான உள் அலங்காரத்தை செய்துள்ளனர்.
7. அஜய் ஷா
மும்பை சார்ந்த வடிவமைப்பாளரான அஜய் ஷா, ரீடைல் அடிப்படையிலான வடிவமைப்பில் சிறந்து விளங்குபவர். தொழிற்சாலை வடிவமைப்பு மற்றும் கட்டடக்கலை கட்டமைப்புகள் உள்ளிட்ட பல திட்டங்களுக்கு அவர் பணிபுரிந்துள்ளார்.
பெங்களூரு ஃபாரம் மாலின் ட்ரான்ஸிட் உணவகம், மும்பையின் எப்ஸிலான் டவர்ஸ் குடியிருப்பு ஆகியவை இவரது திறமைக்கு சான்று.
6. லிபிகா சூட்
அடுத்த உள் அலங்கார வடிவமைப்பு பிரபலம் லிபிகா சூட். தில்லியில் வசிக்கும் லிபிகா கார்ப்பரேட் அலுவலகங்கள் மற்றும் ஹோட்டல் போன்ற பெரிய திட்டங்களை வடிவமைத்துள்ளார். 2012 ஆம் ஆண்டின் கவுரவமிக்க விருதான best design professional என்று கௌரவிக்கப்பட்டவர்.
புதுடெல்லி மெட்ரோ ரயில் நிறுத்தங்கள், ஹவெல்ஸ் நிறுவன அலுலகம் மற்றும் ஹுண்டாய் மோட்டார்ஸ் உள்ளிட்ட பல கார்ப்பரேட் நிறுவனங்கள் இவரது வாடிக்கையாளர்கள்.
5. அமீர் மற்றும் ஹமீதா ஷர்மா
ஹைதராபாத்தில் வசிக்கும் புகழ்பெற்ற இந்திய இண்டீரியர் வடிவமைப்பாளர் அமீர் ஷர்மா. இவரது மனைவி ஹமீதாவும் இதே துறையில் பரிமளிப்பவர். இருவரும் இணைந்து ஆமிர் அண்ட் ஹமீதா என்ற இண்டீரியர் டிசைனிங் நிறுவனத்தை நடத்தி வருகின்றனர்.
டெஸ்ட ரோசா கஃபே மற்றும் லோட்டஸ் பேலஸ் ரெஸ்டாரண்ட்ஸ் உள்ளிட்ட இடங்களை வடிவமைத்தவர். இவருடைய வடிவமைப்புகளில் தனித்துவமான கற்பனை இருக்கும். தனித்துவமான உள் அலங்கார வடிவமைப்புக்காக மாநில மற்றும் தேசிய அளவில் 20 விருதுகளை பெற்றுள்ளார்.
4. அஞ்ஜும் ஜங்
பெங்களூரில் வசிக்கும் அஞ்ஜும் ஜங், ஸ்டைலான நகர்ப்புற உள் வடிவமைப்புகளை உருவாக்குவதில் புகழ்பெற்றவர். 49 வயதான அஞ்ஜும் 23 வருடங்களாக மார்ஃப் டிசைன் என்ற டிசைனிங் நிறுவனத்தை நடத்தி வருகிறார். ப்ரெஸ்டீஜ் குழும நிறுவனர் சகோதரி இவர் என்பது குறிப்பிடத்தக்கது.
அடுக்குமாடி குடியிருப்பு, வில்லா, க்ளப் ஹவுஸ், ஸ்பா, ரிசார்ட், ஹோட்டல்கள் என நீளமான பட்டியலை போர்ட்ஃபோலியோவாக வைத்திருப்பவர். அங்கசானா ஓசியஸ் ஸ்பா மற்றும் ரிசார்ட் மற்றும் ஓக்வுட் சர்வீஸ் உள்ளிட்ட இடங்கள் இவர் திறனில் உருவான இடங்களில் சில.
3. அம்ப்ரிஷ் அரோரா
அம்பரிஷ் 30 வருடங்களாக இந்தத் துறையில் இயங்கி வருகிறார். 2002-லிருந்து ஸ்டூடியோ லோட்டஸ் என்ற நிறுவனத்தை நடத்தி வருகிறார். உலக கட்டிடக்கலை விழா மற்றும் உலக கட்டிடக்கலை செய்திகள் விருதுகள் நிகழ்ச்சியில் விருது பெற்றுள்ளார்.
குன்னூர் ஹவுஸ், சென்னையின் ராயல் என்ஃபீல்ட் தலைமையகம், புவனேஸ்வரின் மாநில அரசுக்கு சொந்தமான க்ரிஷீ பவன் உள்ளிட்ட இடங்களை வடிவமைத்துள்ளார்.
2. தான்யா க்யானி
புதுடெல்லியைச் சேர்ந்த திறமையான வடிவமைப்பாளரான தான்யா க்யானி. வீடுகளுக்கான உள் வடிவமைப்பு மற்றும் அலங்காரத்தில் நிபுணத்துவம் பெற்றிருப்பவர். இந்தியா, இத்தாலி மற்றும் ஃபிரான்ஸில் உள்ளிட்ட இடங்களில் டிசைனிங் படித்தவர்.
ஃபிரான்ஸின் புகழ்பெற்ற ஃப்ளாரென்ஸ் பார், துபாயின் பல ஆடம்பரக் கட்டுமானங்கள், காத்மண்டு மலைகளில் இருக்கும் ஒரு உணவகம் என இவரது உள் அலங்காரம் இடம்பெற்றுள்ள இடங்கள் ஏராளம்.
1. சுனிதா கோலி
இந்தியாவில் தலைசிறந்த வடிவமைப்பாளர் என அறியப்படும் சுனிதா கோலி ஆங்கில இலக்கிய பட்டதாரி. வடிவமைப்பு மற்றும் அலங்காரத்துக்காக தனியாக படிக்காதவர். 1992ல் பத்மஸ்ரீ விருது பெற்ற முதல் இண்டீரியர் டிசைனர். ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ராஜீவ் காந்தி நினைவிடத்தின் வடிவமைப்பில் இவருக்கும் பங்குள்ளது. ராஷ்டிரபதி பவனின் மறுசீரமைப்பு இவரின் புகழ்பெற்ற திட்டமாகும்.
அமெரிக்கா, ஐரோப்பா என பல கல்வி நிலையங்களிலும், ஹார்வர்ட் உள்ளிட்ட பல்கலைக்கழகங்களிலும் டிசைனிங் குறித்து உரையாற்றியுள்ளார். இந்தியா, இலங்கை, இங்கிலாந்து உள்ளிட்ட பல இடங்களில் ஆடம்பர வீடுகளுக்கான உள் அலங்காரத்தை கவனித்துள்ளார்.